பார்த்தது, கேட்டது, படித்தது!


பார்த்தது, கேட்டது, படித்தது!

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செய்தியாளர்கள், ஒவ்வொரு நாளும் பலவிதமான சம்பவங்களை பார்க்கின்றனர்; பலவிதமான தகவல்களை கேட்கின்றனர்; பலவிதமான புதினங்களை படிக்கின்றனர். ஆனால், அன்றைய நாளின் முக்கியத்துவம் மற்றும் இட நெருக்கடி காரணமாக, முக்கியமான விஷயங்களை மட்டும் நாளிதழில் செய்தியாக இறக்கி, மற்ற விஷயங்களை மனதில் சுமந்தபடியே இருப்பர்; இறக்கி வைக்க சரியான களம் தேடி தவிப்பர். இதற்கு, ‘தினமலர் – வாரமலர்’ வாசகர்களின் ஏகோபித்த அன்பையும், வரவேற்பையும் பெற்றுள்ள அந்துமணியும் விதி விலக்கல்ல! ‘இதற்கான தீர்வு தானே வரும்...’ என, காத்திருக்கும் ரகமும் அல்ல அவர். அதற்கான வழியைத் தேடிக் கண்டுபிடிப்பார். வழியே இல்லையா... அதற்காக கவலைப்படாமல் தானே ஒரு வழியை உருவாக்கி விடுவார்; அந்த வல்லமை அவருக்கு உண்டு. அப்படி, இவரால் வாரமலரில் உருவாக்கப்பட்ட களம் தான், ‘பார்த்தது, கேட்டது, படித்தது’ சுருக்கமாக, பா.கே.ப.,தேசமே பெரிதெனக் கருதுபவர் என்பதால், பிரிவினை வாதத்தை விதைக்கும் நயவஞ்சகக் கூட்டத்தின் பேச்சை, அதற்காக, அவர்கள் இளைஞர்களை நோக்கி விரிக்கும் மாய வலைகளை துணிந்து அடையாளம் காட்டி, அதை அறுத்தெறிய முற்படுகிறார். அப்பகுதிகள் நம்மை சிந்திக்க துாண்டுகிறது. சமூக அவலங்களை, சுரண்டும் அதிகாரிகளை, லஞ்சப் பேர் வழிகளை, மோசமான அரசியல்வாதிகளை, முகமூடி மனிதர்களை, போலித் தலைவர்களை பார்க்கும் போதும், அவர்களை பற்றி கேட்கும் போதும், படிக்கும் போதும், குமுறுகிறார்; அவரது குமுறல்கள், புத்தகத்தின் பல பக்கங்களில் எரிமலையாக வெடித்திருக்கிறது. செய்திகளுக்கான பக்க வாத்தியமாக இவர் ஆரம்பித்த பா.கே.ப., பகுதி, ஆரம்பித்த சில வாரங்களிலேயே, ‘பக்கா’ வாத்தியமாக மாறிப்போனது, அதாவது, வாரமலரில் வரும் சிறுகதை, கட்டுரை, திண்ணை உள்ளிட்ட மற்ற பகுதிகளை படித்து விட்டு, கடைசியில், பா.கே.ப., படித்த வாசகர்கள், முதலில், இந்த பகுதியை படித்து விட்டுத் தான், மற்ற பகுதிகளை படிக்குமளவிற்கு மாறிப் போயினர்.காரணம், அவரதுஎழுத்தில் இருந்த எளிமை, நேர்மை, உண்மை மற்றும் வாசகரை தன் குடும்பத்தில் ஒருவராக கருதி வெளிப்படுத்தும் அன்பும், ஆறுதலும் தான். மூன்று பாகங்கள், மூன்று புத்தகங்களாக வெளியாகியுள்ளன. புத்தகங்களின் கனத்தை விட, புத்தகத்தினுள் இருக்கும் விஷயங்கள், ரொம்ப, ‘கனமாக’ இருக்கின்றன.1990, 91,92ம் காலகட்டத்தில் நடந்த உலக அரசியல் முதல் உள்ளூர் அரசியல் வரை இப்புத்தகங்களில் அலசியிருக்கிறார். இந்திய அரசியலின் மாற்றங்கள் முதல் தமிழக அரசியலில் நடந்த சதுரங்கங்கள் வரை விவரித்திருக்கிறார். படிக்க படிக்க வெகு சுவாரஸ்யம்.வாசகர்களுக்கு கொண்டாட்டம்இந்த மூன்று புத்தகங்களிலும் இவரால் அலசப்பட்டிருக்கும் விஷயங்கள், மருந்துக்கு கூட அடுத்து வரும் பக்கங்களில் மட்டுமல்ல... அடுத்தடுத்த புத்தகங்களிலும் கூட இடம் பெறவில்லை. ஆகவே, ஒவ்வொரு புத்தகமும் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் தான். பார்த்தது பகுதியில், தமிழகத்தின் மூலை முடுக்கில் எல்லாம் இவர் பயணித்த போது, பார்த்த அனுபவங்கள் அதிகம். இவர் பார்த்ததை விட, இவருடன் பயணித்த லென்ஸ் மாமா பார்த்திடக் கூடாது என்று, இவர் தடுத்த, தவித்த விஷயங்களும் பல உண்டு. லென்ஸ் மாமா, தன் தடித்த மூக்கு கண்ணாடியை துடைத்து மாட்டிக் கொண்டார் என்றால், வம்பு வண்டி வண்டியாக வருகிறது; படிக்கும் நமக்கு சிரிப்பு பொங்குகிறது. போதும் போதாதற்கு ‘எப்போதோ வெள்ளை நிறத்தில் இருந்த தன் கர்சீப்பை எடுத்த லென்ஸ் மாமா...’ என்று இவரும் அவ்வப்போது, அவரை காலை வாருகிறார்.பிற நாட்டு ரேடியோ நிகழ்ச்சிகளை கேட்டு, தான் அறிந்து உலக நடப்புகளை வாசகருக்கும், பந்தி வைத்து, பாயசமாய் பரிமாறியிருக்கிறார், கேட்டது பகுதிகளில்!அதேபோல, இவர் பொது இடங்களுக்கு போகும் போது, இவரைத் தேடி வந்து விஷய தானம் செய்கின்றனரா அல்லது விஷயம் கிடைக்கும் இடத்திற்கு, இவர் போகிறாரா என்று பிரித்துப் பார்க்க முடியாத அளவிற்கு, செல்லும் இடங்களில் எல்லாம், இவருக்கு கிடைக்கும் தகவல்களால், வாசகர்களுக்குத் தான் கொண்டாட்டம்.அவர் உயிராக மதிக்கும் வாசக –வாசகியரின் கடிதங்களாலும், அதற்கு அந்துமணி எழுதிய பதில்களாலும், படித்தது பகுதி நிறைந்து காணப்படுகிறது. இவரது எழுத்தைப் படித்து படித்து, வாசகியரின் எழுத்து நடையும், பல இடங்களில் நம்மை கவனிக்க வைக்கிறது. வீணே சந்தேகப்படும் கணவனைப் பற்றி எழுதுகையில், ‘கற்பு என்ன கையிலா இருக்கிறது... தொலைந்து போக...’ என்று வாசகி ஒருவரின் கடிதம் படிப்பவரை சிந்திக்க வைக்கிறது. இந்த பகுதியை படிக்கவிருக்கும் புதிய பெண் வாசகியருக்கு, நிச்சயமாக ஓர் உறுதியை கொடுக்க முடியும்... இந்த புத்தகத்தில் உள்ள பல வாசகியரின் பிரச்னைகளும், அதற்கு அந்துமணி தந்த தீர்வுகளும், உங்களில் பலருக்கும் தேவைப்படும்; எளிதில் முடிவு எடுக்கும் திறனையும், மன தைரியத்தையும் கண்டிப்பாக தரும்.நேரில் சென்று ஆறுதல்கடிதம் எழுதிய பல வாசகியருக்கு வெறுமனே பதில் மட்டும் தராமல், சூழ்நிலையின் அவசரம், அவசியம் கருதி, தம் அலுவலக பெண் அலுவலர்களை நேரில் அனுப்பி, சம்பந்தப்பட்ட வாசகியரை காப்பாற்றி, ‘நான் இருக்கிறேன்...’ என்று சொல்லாமல் சொல்லி, அவர்களின் கண்ணீரையும், கவலைகளையும் துடைத்திருக்கிறார் நிரந்தரமாக!இப்படிப்பட்டவரின் எழுத்தை படிக்க, ஏன் லட்சக்கணக்கில் வாசகியர் காத்திருக்கின்றனர் என்பது, இப்புத்தகங்களை படிக்கும் போது புரிகிறது இரண்டாவது புத்தகத்தில், 95ம் பக்கத்தில், ஜாதி, மதம் பற்றிய, ‘பேனடிக்’ கொள்கை உடையவர்கள் பற்றி அந்துமணி குறிப்பிடும் போது, ‘கொப்பளித்து வரும் ரத்தம், எல்லா மதத்தினருக்கும், ஜாதியினருக்கும் ஒன்று தான். நான், இந்த ஜாதி என்று சொல்லிக் கொண்டு என்னிடம் வராதீர்கள்...’ என்று, தன் குணாதிசயத்தை விளக்கும் இடத்தில், நாமும் இவரது கொள்கையோடு இணைந்து விடுகிறோம். ராஜிவ் கொலை குறித்து இவர் எழுதியுள்ளதை படித்தால், கல் மனம் கொண்டோரும் கலங்கிப் போவது நிச்சயம். அதேபோல், பிரித்தாளும் சூழ்ச்சியால், பிளவு பட்டு கிடக்கும் சோமாலியா மக்கள் உணவிற்கும், தண்ணீருக்கும் படும் சிரமத்தை விவரித்துள்ளார். படிப்பவர் நெஞ்சம் பதறிப் போய் விடும்; நாம் வாழும் வாழ்க்கை எவ்வளவு மகத்தானது என்பது புலப்படும். ஆனால், வாசகர்களை அழ வைக்க வேண்டும் என்பதற்காக, அவர் சோமலியா பிரச்னையை சொல்லவில்லை; சுயநல கும்பல்களால், தமிழகமும் ஒரு சோமாலியா ஆகிவிடக்கூடாது என்று எச்சரிக்கவே எழுதியுள்ளார். படித்துப் பாருங்கள் உண்மை உங்களுக்கே விளங்கும். எல்லாமே கம்ப்யூட்டர் என்றாகி விட்ட இன்றைய நிலையில், முதன் முதலாக, பிரின்டிங் தொழிலுக்கு கம்ப்யூட்டர் அறிமுகமான விஷயத்தை எழுதியுள்ளார். படிக்கும் போது வேடிக்கையாக இருக்கிறது. இப்படியெல்லாமா கம்ப்யூட்டர் இருந்தது என்பதை எண்ணி, ஆச்சர்யம் வருகிறது. இதற்காக, ‘தி கிளம்மர் ஆப் எலக்ட்ரானிக் கனெக்சன், அனலாக் டிஜிட்டர், டியூயல் பேஸ் கம்யூனிகேஷன்’ போன்ற புத்தகங்களை மிகவும் சிரமப்பட்டு, தருவித்து படித்திருக்கிறார்.வாசிப்பை, இவர் போல நேசிப்பவர் யாரும் இல்லை. நிறைய புத்தகங்களை வாசகர்களுக்கு, அதன் கருப்பொருளுடன் அறிமுகம் செய்துள்ளார். நான் நேரில் பார்த்த ஒரு சம்பவத்தை இங்கே பகிர்கிறேன்...ஒருமுறை குற்றால டூரில், பொள்ளாச்சி வாசகர் ஒருவர், ‘உங்களுக்கு பிடிக்கும் என்பதால், இந்த புத்தகத்தை சொல்லி வைத்து வாங்கினேன். நேற்று தான் இந்த புத்தகம் வெளியானது...’ என்று ஏகப்பட்ட, ‘பில்டப்’புகளுடன் அந்துமணிக்கு அந்த புத்தகத்தை கொடுக்க, சந்தோஷத்துடன் பெற்றுக் கொண்டவர், ‘இதை, நான் நேற்றே படித்து முடித்து விட்டேனே...’ என்றார், கூலாக!வேடிக்கைக்கு பஞ்சமில்லைகடந்த, 1992ல், பெங்களூருவில், ‘ஆட்டோ ஓட்ட பெண்களுக்கு அனுமதி’ என்ற செய்தியை படித்து விட்டு, அவரைப் பற்றி படத்துடன் சிறப்பாக எழுதி, (மூன்றாவது புத்தகம் பக்கம் எண், 22ல்), ‘நம்மூர் பெண்களும் குறைந்தவர்கள் இல்லை; இங்கேயும் அனுமதி கொடுங்கள்...’ என்று, இவர் கொடுத்த குரல், அடுத்த சில நாட்களிலேயே அமலுக்கு வந்தது.புத்தகத்தில் வேடிக்கைக்கு பஞ்சமில்லை. சென்னைக்கு பக்கத்தில் என்று சொல்லி, செங்கல்பட்டு வரை கூட்டிப்போன ரியல் எஸ்டேட்காரர்கள் பற்றி குறிப்பிடுகிறார். இப்போது, செங்கல்பட்டு, விழுப்புரம் வரை விரிவு பெற்றுள்ளது.முதன் முதலில் அறிமுகமான, ‘சுவேகா’ மொபட்டை ஒட்டுவதற்காக இவர் பட்ட பாடு, நடிகை பிரமீளாவுடன் விமானப் பயணத்தில் ஏற்பட்ட சிக்கல், ‘வஹ் பல் காதா ஹை’ என்று இவர் ஹிந்தி படித்த அனுபவம் (முதல் புத்தகத்தில் 113ம் பக்கம்) எல்லாம் குலுங்க குலுங்க சிரிக்க வைப்பவை.சோனி கம்பெனி அதிபர் அகி மொரிடா பற்றிய வரலாற்றை விவரித்து, ‘இதைவிட சுவாரசியமான வரலாறு நம்மிடம் உள்ளது; ‘கடல் தாமரை’ புத்தகம் படியுங்கள். டி.வி.ஆர்., என்ற மாமனிதரைப்பற்றி புரியும், தெரியும்...’ என்கிறார்.வாசகர்களுக்காக, ஊர் ஊராகப் போய் இவர் நடத்திய இசைமலர் போட்டி பற்றிய செய்திகளும், ‘தினமலர் – தீபாவளி மலர்’ வாங்கும் வாசகர்களை, வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்த அனுபவத்தையும், ‘வாரமலர்’ வாசகர்களுக்கான குற்றால டூர் பற்றிய தகவல்களையும் இங்கே சொன்னால், இந்த மதிப்புரையே ஒரு புத்தகமாகி விடும்.‘எப்போதுமே என் நாடு, என் மக்கள், என் தாய்மொழி’ என்பதில் உறுதியாக நிற்கும் அந்துமணி, என்னுரையில் எழுதியதைத் தான் இந்த புத்தக மதிப்புரை நிறைவுரையாக தர விரும்புகிறேன்‘வாசகர்களாகிய உங்களைப் போல, எனக்குள் எழும் தார்மீக கோபம், கேள்விகள் இவை அனைத்தையும் உங்களிடம் இன்னும் நிறைய பகிர்ந்து கொள்ள வேண்டும்; உங்கள் குரலாய் என் எழுத்து பிரதிபலிக்க வேண்டும் என்ற, என் எண்ணத்தின் தொகுப்பே இந்த புத்தகங்கள்...’ என்று குறிப்பிட்டுள்ளார்.இந்த மூன்று புத்தகங்களை படித்த எனக்கும், படிக்கவிருக்கும் வாசகர்களுக்கும் புத்தகத்தில் மிகவும் பிடித்த ஓரு வாக்கியம் இருக்கிறது. அது, மொத்தம் பத்து புத்தகங்கள். விரைவில், மீதம் உள்ள ஏழு புத்தகங்கள் வெளிவரும் என்பது தான்!பத்தெல்லாம் பத்தாது‘விரைவில் அந்த ஏழு புத்தகங்களையும் தாருங்கள்...’ என்று வாசகர்கள் சார்பில், அன்பு வேண்டுகோள் விடுக்கிறோம். மேலும், பத்து புத்தகங்களுடன் உங்கள் பகிர்தல் நிற்கக் கூடாது; அது, வாசகர்களுக்கு பத்தாது; குறைந்தது நுாறு புத்தகங்களாக வரவேண்டும், வரும்.தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் சார்பில் வெளியிடப்பட்டுள்ள, ‘பார்த்தது, கேட்டது, படித்தது’ என்ற இந்த மூன்று புத்தகங்களும் தேவைப்படுவோர் தொடர்பு கொள்ள வேண்டிய, ‘டோல் ப்ரீ’ எண்:1800 425 7700 (நேரம் காலை, 6:00 முதல் மாலை 6:00 வரை) புத்தகம் அமேசான் ஆன்லைனிலும் கிடைக்கும்.– எல்.முருகராஜ்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


  • இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட், 138, பெரம்பூர் நெடுஞ்சாலை, சென்னை-12. (பக்கம்: 112).புகழ் மிக்க இஸ்லாமியர் பெருமக்கள் வரலாறுகளிலிருந்து அவர்களது தூய்மை, மதிநுட்பம், வீரம், தியாகம், சகிப்புத்தன்மை, மன்னிக்கும் மனப்பான்மை போன்ற மிக உயரிய பண்புகளைப் பிரதிபலிக்கும் சம்பவங்களைக் கட்டுரை வடிவில் சுவையாகத் தந்திருக்கிறார் ஆசிரியர்.

  • விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சன்னை-02. (பக்கம்:222)ஜூனியர் விகடன் இதழில் ஜென்ராம் எழுதிய 47 செய்தி விமர்சனக் கட்டுரைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன.

  • விஜயா பதிப்பகம், 20, ராஜ வீதி, கோவை-641 001. (பக்கம்: 196). இந்திய ஆட்சிப் பணியில் உயர் அதிகாரியாகப் பணிபுரியும் வெ.இறையன்பு, இன்றைய இளைஞர்களின் நலனிலும் நாளைய இந்தியாவின் வளத்திலும் அதிக அக்கறை உள்ளவர். எழுத்தை ஆளும் திறமை படைத்த இவர், தனது படைப்பாற்றலையும் சமூக நலனுக்கே அர்ப்பணிக்கும் இயல்புடையவர் என்பதை இந்த நூலின் மூலம் தெரிந்து கொள்கிறோம். தனி மனிதன் உடல் சார்ந்த ஒழுக்கமும் மனம் சார்ந்த தூய்மையும் கொண்டு அறிவின் ஆற்றலைத் துணையாக ஏற்று வாழ வேண்டும் என்பதை, இந்த நூலில் உள்ள 25 கட்டுரைகள் வாயிலாக நமக்கு உணர்த்துகிறார். ஆன்மிகம் என்பது அன்றாட வாழ்க்கையுடன் இரண்டறப் பின்னிப் பிணைந்துள்ளது என்பதை கடவுள் மறுப்பாளர்களுக்கும்,"கடி தோச்சி மெல்ல' உணர்த்துகிறார். ஆன்மிகத்தை விளக்கிக் கூறுகையில், நகைச்சுவையும் சரியான விகிதத்தில் கலந்து கூற வேண்டும் என்பதை நூலாசிரியர் நன்கு உணர்ந்து இந்தக் கட்டுரைகளை வடிவமைத்திருக்கிறார். நகைச்சுவை சற்று தூக்கலாக இருந்து விட்டால், சொல்ல முற்படும் ஆன்மிக கருத்துக்கள் நீர்த்துப் போய் விடக்கூடும் என்பதைப் புரிந்து கொண்டு எழுதியுள்ள இந்தக் கட்டுரைகளைப் படிக்கும்போது வழிபாட்டின் அருமையை வாழ்க்கையின் பெருமையை நாம் உணர்ந்து மகிழ்கிறோம்.

  • புதுச்சேரி வரலாற்று சங்கம், 86, ஈசுவரன் கோவில் தெரு, புதுச்சேரி-605 001. (பக்கம்: 312).புதுச்சேரி, வரலாற்று நாயகர்கள், புலவர்கள், இலக்கியம், காரைக்கால், ஏனாம், சந்திரநாகூர், என்ற தலைப்புகளில் ஆற்றிய பேருரைகள் 52 கட்டுரைகளாக இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. அனைத்தும் மணி மணியான கட்டுரைகள். ஆழ்ந்து வாசித்து அசை போட வேண்டியவை. குறிப்பாக "புதுவையில் பாரதி' என்ற கட்டுரையின் இறுதியில் "புதுவை அந்தப் பாட்டுப் பறவையை (பாரதி) பத்தாண்டுகள் பாதுகாத்துப் படைப்பிலக்கியம் பல படைக்கச் செய்தது. பறந்து சென்ற மூன்றாண்டுகளில் (பாரதி மீண்டும் தமிழகம் வந்து) அதன் சிறகொடித்துச் சாகடித்து தமிழ்நாடு' என்ற வரிகள் தமிழர் நெஞ்சை கனக்கச் செய்யும்.

  • ஜைன இளைஞர் மன்றம், 5, தெற்கு போக் ரோடு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 190)."சமண சமயம் தமிழகத்தில் சிறப்புற்று முன்பு விளங்கியது. அரசியலில் மட்டும் அன்று; கல்வித் துறையிலும் அறிவுத் துறையிலும் தான். சமணர் காலமே தமிழ் நாகரிகத்தின் பொற்காலம் என்று மொழி அறிஞர் கால்டுவெல் கூறியுள்ளதை இந்த நூல் ஆதாரங்களுடன் நிரூபிக்கிறது.கொல்லாமை, புலால் மறுத்தல், பிறரைத் துன்புறுத் தாமை, சமூக சமத்துவம், பெண் சமத்துவம், சமய சகிப்பு, கல்வி வளர்ச்சி, தமிழ் இலக்கிய இலக்கண வளர்ச்சி ஆகிய இந்தத் தடங்களில் தமிழகத்தை 2000 ஆண்டுகளுக்கு முன் முன்னேற்றியது சமணம் என்பதை இந்நூலின் கட்டுரைகள் சான்றுகளுடன் சாதிக்கின்றன.சிந்து சமவெளி நாகரிகம் சமணமே என்றும், திருக்குறள், சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, நீலகேசி முதலிய தமிழ் இலக்கியங்கள் சமண இலக்கியங்களே என்றும் உறுதி செய்கிறார். எண்குணத்தான், ஐந்து அவித்தான், இருள் சேர் இருவினை, போன்ற குறள் பகுதிகளுக்குச் சமணத்திலிருந்து விளக்கம் தந்துள்ளார்.பள்ளிக்கூடம் என்று இன்றும் நாம் அழைக்கும் கல்விச் சாலையின் பெயரை தந்தது சமணம். சைன மதத் துறவியர் இருந்த இடமே "பள்ளிகள்' என்று அழைக்கப்பட்டன. அங்கிருந்து அவர்கள் கல்வி தானம் செய்ததால் தமிழ்ப் பள்ளி என்று அழைக்கப்பட்டிருந்தது. சமணராகிய தமிழ் ஜைனர்களின் மதச் சடங்குகள், கலை வளர்ச்சிகள், பண்பாடு ஒழுக்கங்கள், இவை இன்று நம் கண் முன் வாழும் வடநாட்டு வட்டி வாங்கும் சேட்டுகளாகிய ஜெயின்களிடமிருந்து மாறுபட்டது. தமிழுக்கே உரித்தான தமிழ்ச் சமணத்தின் பழமையும், பெருமையும் இந்த நூலைப் படித்தால் உணர்ந்து போற்றலாம்.

  • கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017.

  • தமிழாய்வு: கடந்த காலமும் வருங்காலமும் என்னும் பொதுப் பொருளில் நிகழ்ந்த முதன் பன்னாட்டுக் கருத்தரங்கக் கட்டுரைகளின் தொகுப்பு. (ஒவ்வொன்றும் 256 பக்கங்கள். ஒவ்வொன்றும் விலை ரூ.80) மெய்யப்பன் பதிப்பகம், 53, புதுத் தெரு, சிதம்பரம்-608 001.சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் மொழித் துறை ஆய்வு மாணவர்கள் ஒருங்கிணைந்து நிறுவியுள்ள கல்விசார் அமைப்பு தமிழாய்வு மன்றம், பல்வேறு பல்கலைக்கழகங்கள், ஆய்வு நிறுவனங்களை சேர்ந்தவர்களின் கருத்தரங்கக் கட்டுரைகள். அவற்றைத் தொகுத்து "ஆய்வுகளாக ஐந்து தொகுதிகளாக உருப் பெற்றிருக்கிறது.தமிழிலும் ஆங்கிலத்திலும் 460 ஆய்வுக் கட்டுரைகள் இதில் இடம் பெற்றுள்ளன. எல்லா தலைப்புகளிலும் ஆய்வுக் கட்டுரைகளை அளித்து அசத்தி விட்டனர் ஆய்வாளர்கள்.சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் மொழித் துறை மாணவர்கள் பன்னாட்டு மாணவர்களைக் கொண்டு மாணாக்கர்களுக்கு நடத்தும் முதல் பன்னாட்டுக் கருத்தரங்கில் ஒளிவீசும் மணிக் கதிர்களின் அணிவகுப்பாக அழகுற வருகிறது இந்த ஆய்வுக்கதிர்- என சென்னைப் பல்கலைக்கழக தமிழ் மொழித்துறை தலைவர் பேராசிரியர் வ.ஜெயதேவனால் பாராட்டப் பெற்ற தொகுதிகள் இவை.இத்தொகுதிகள் ஆய்வுக் கடல். அனைவரும் இத்தொகுதியில் மூழ்கி முத்தெடுக்கலாம்.

  • நேஷனல் பப்ளிஷர்ஸ், 2, வடக்கு உஸ்மான் சாலை (முதல் மாடி), தி.நகர், சென்னை-17. (பக்கம்: 192).பத்திரிகையில் தொடராக எழுதிய 39 கட்டுரையின் தொகுப்பு தான் இந்த நூல். உலக இலக்கியங்களில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவற்றிலிருந்து மேற்கோள்கள் எடுக்கப்பட்டு அவை கட்டுரையாக்கப்பட்டுள்ளன. கட்டுரையாளர் அப்துல்காதர் பேச்சாளர் என்பதால் அவரையும் அறியாமல் எழுத்து நடையை விட பேச்சு நடை கைகொடுத்திருப்பதைக் காண முடிகிறது. ஒவ்வொரு கட்டுரைக்கும் நூலாசிரியர் கொடுத்திருக்கும் தலைப்புகள் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளன.அன்பே! அந்தக் கொசுவினைச்சாகடித்து விடாதே! அந்தக் கொசுமுதலில்உன்னைக் கடித்தது!

  • வனிதா பதிப்பகம், 11, நானா தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 176).பிரபல நாளேட்டில் நூலாசிரியர் அவ்வப்போது எழுதிய கட்டுரைகள் இப்போது நூல் வடிவம் பெற்றுள்ளது. தமிழகத்தின் மிகச் சிறந்த பட்டிமன்ற பேச்சாளரான இந்தப் பேராசிரியரின் சொல்லாற்றல் நாம் அறிந்தது தான். ஆனால், எழுத்தாற்றலை இந்த நூல் மூலம் தான் தெரிந்து கொள்கிறோம். 24 கட்டுரைகளின் தொகுப்பு. அம்பேத்கர் தொடங்கி அம்ருதாபிரீதம் வரை, மீட்டர் கேஜ் ரயில் பாதை அகல ரயில் பாதையாக மாறுவதைப் பற்றிய ஒரு வழி அனுப்பு உபசாரக் கட்டுரையில் ஆரம்பித்து வரி கட்டுவது சுமையா, சுகமா என்ற கேள்வியை எழுப்பி, விழிப்புணர்வு பிரசாரக் கட்டுரை வரை, பலதரப்பட்ட விஷயங்களை சுவைபட ஆசிரியர் எழுதியிருக்கிறார். இந்தக் கட்டுரைகளில் உள்ளவைகளை ஆழ்ந்து படித்துப் பார்த்தால் நமக்கு இதுவரை தெரியாத பல விஷயங்களை ஆசிரியர் சுவைபட எடுத்துச் சொல்லியிருப்பதை உணர முடிகிறது. பயனுள்ள பல தகவல்களை உள்ளடக்கிய சிறந்த புத்தகம்.

  • தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.

  • தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.

  • அமராவதி பதிப்பகம், 59, ஆடம் தெரு, மயிலாப்பூர், சென்னை-4. (பக்கம்: 72).வேடர்கள் குலத்தில் உதித்து தங்கள் உறுதியான பக்தி நெறியால் பெரும் சாதனை படைத்த பன்னிருவரது வாழ்க்கை பற்றிய கட்டுரைகள் ஜாதி வேறுபாடற்ற நிலையை எடுத்துக் காட்டும் நூல்.

  • தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.

  • தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.

  • க.தி. அருள்மன்றம், வகுளமாலிகா, மாருதிநகர், மதுராந்தகம்-603306. (பக்கம்: 148)பத்தொன்பது கட்டுரைகளின் தொகுப்பாக உள்ள இந்நூலில், ராமாயணம் குறித்து பெரும்பாலான கட்டுரைகள் உள்ளன. முதல் கட்டுரையின் தலைப்பே, நூலின் பெயராக விளங்குகிறது. பேச்சாற்றல் மிக்க இந்நூலாசிரியர், தம் எழுத்தாற்றலையும் இந்நூல் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார்.கும்பகர்ணன் உறங்கவில்லை என்ற முதல் கட்டுரையில் "ஆசில் பரதாரம்' என்று தொடங்கும் கம்பரின் பாடலை நன்கு விளக்கியுள்ளதும் (பக்.2), கும்பகர்ணன், வீடணன் இருவரும் முறையே வாழைப்பழம், திராட்சைப்பழம் போன்றவர்கள் என்று ஒப்பிடுவதும் (பக்.4). மூக்கில்லாத தவளும் இடையில்லாதவளும் என்ற கட்டுரையில் கம்பனின் நகைச்சுவையை விளக்குவதும் (பக்.32, 33), இராமபிரானின் சிறப்பை எண்ணி சீதை அழுவதை விளக்குவதும் (பக்.79), நூலாசிரியரின் ஆழ்ந்த புலமைக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும். படிக்கத்தக்க பயனுள்ள நூல்.

  • தமிழாய்வு மன்றம் எடுத்த இம்முயற்சி அமிழ்தினும் இனிய தமிழைப் பரப்பும் பணியாகும். ஆங்கிலக் கட்டுரைகள் இடம் பெறுவதையும் வரவேற்கும் செயல் உலகத்தோடு ஒட்ட ஒழுகலைப் படம் பிடிக்கிறது. அதனால் தான் தொல்காப்பியத்துச் செய்யுளியலில் உள்ள "நோக்கு' என்பதற்கு இளம்பூரணர் உரையை ஆசிரியர் பதிவு செய்திருக்கிறார் போலும். திருக்குறள் மூல நூலை சிதைப்பதைச் சாடுகிறார் தமிழண்ணல். அக்கட்டுரைக்கு முத்தாய்ப்பாக சங்கம் வளர்த்த பெருங்கோமான் பாண்டியத்துரைத் தேவர் பண்பாடு இன்று எல்லாராலும் புரிந்து கொள்ள வேண்டிய தகவல். "துவக்கம்' என்ற சொல் சரியல்ல: "தொடக்கம் ' என்பதே இலக்கண வழக்கு என்று வினா -விடையில் தரப்பட்டிருக்கும் தகவல். ஆழமாக தமிழைக் கற்றுத் தெளிய விரும்பும் ஆர்வலர் அனைவரும் விரும்பி இந்த இதழைச் சுவைப்பர் என்பது நிச்சயம்.

  • வள்ளி சுந்தர் பதிப்பகம், எண்.84/14, மீர்பக்சிஅலி தெரு, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 152). "கருவறையின் அதிர்வுகள்' துவங்கி, "இணைய வெளிப்பந்தலில்' ஈறாக சுமார் 16 இலக்கிய விமர்சனக் கட்டுரைகள் இதில் அடக்கம். "மனித உடலின் வலப்பக்கம், இடப்பக்கம் எந்தப் பகுதி பாதிக்கப்பட்டாலும் அதை அந்த உடலின் ஊனம் என்றே கருதுகிறோம். அதுபோல சமுதாயத்தில் "ஆணும் பெண்ணும்' என்று "வெளிச்சத்துக்கு வராத வேதனைக் காட்சி'களைக் கண் முன் நிறுத்தும் இக்கட்டுரையாசிரியரின் "மும்பையில் தமிழ் இலக்கியம்,' "விழி தேடும் விடியல்கள்,' "தீக்குள் விரலை வைத்தால்' போன்ற விமர்சனக் கட்டுரைகள் இலக்கியங்கள் மீதும் அதையும் விஞ்சி சமுதாயத்தின் மீதும் அவர் கொண்டுள்ள நேயம் பற்றி பறை சாற்றுகின்றன. "புதிய மாதவி, அரபிக் கடலோரப் புயல்... அது காயப்படுத்தாது, நியாயப்படுத்தும், அவரது கோபமும் நியாயமானது தான்' என்ற மாலன் கூற்றில் உள்ள உண்மை இந்நூலை வாசிப்பவர்களுக்கு புலப்படும்.

  • விஜயா பதிப்பகம், 20, ராஜ வீதி, கோவை-1. (பக்கம்: 136).அணில் கடித்த பழங்கள், மரபின் மைந்தன் முத்தையா கட்டுரையும், பஞ்சவடியின் நிழலில்... எம்.கோபாலகிருஷ்ணன் எழுதிய கட்டுரையும், தென்காசியில் நடைபெற்ற டி.கே.சி., விழாவின் சிறப்பை விவரிக்கிறது. நாமும் விழாவில் கலந்து கொண்ட உணர்வு டி.கே.சி.,யின் சிவலிங்கம் இருந்த குறிப்பேட்டில் சைவ இலக்கியப் பாடல்களையும் சங்கு முத்திரை கொண்ட பக்கத்தில் வைணவ இலக்கியப் பாடல்களையும் காண முடிகிறது. அவர் சுவைத்த 116 பாடல்கள் நூலில் இடம் பெற்றுள்ளது. நாமும் சுவைத்து மகிழலாம்.

  • வைகறைப் பதிப்பகம், திண்டுக்கல். (பக்கம்: 112). சுற்றுச்சூழல் விழிப்புணர்வு இக்காலத்தில் இன்றியமையாதது. இதை 13 கட்டுரைகளாக இந்நூலில் காணலாம்.இயற்கையை காத்தல், கடலோடிகள், பாரம்பரிய தகவல்கள், கடல்சார் குறிப்புகள், கடல் பற்றிய மரபுவழி அறிவு, மீன் பிடிக்கும் முறைகள், முத்துக் குளித்தல், மீனவர் பெற வேண்டிய வளம் என ஆய்வு செய்து சொற்பொழிவாக நிகழ்த்திய கட்டுரைகள் கையடக்கப் பிரதியாக வந்துள்ளது.மீன்களின் விற்பனை, பதப்படுத்தும் முறைகள், இவை சார்ந்த பிரச்னைகள் என எல்லாவற்றையும் எடுத்துச் சொல்லும் அழகு வெகு அருமை! சிறு நூலில் சிறந்த தகவல்கள்.

  • வெளியிட்டோர் நியூ ஈரா பப்ளிகேஷன்ஸ் அஞ்சல் பெட்டி எண்.8780, அடையார், சென்னை-600 020. மரபியல் வழி வந்த பண்பாட்டுப் பொருள்களைச் சீர் செய்தல், பாதுகாத்தல் ஆகியன மிக நுணுக்கமான பணிகளாகக் கருதப்படுகின்றன. இந்தியா போன்ற தொன்மையான நாடுகளில் அகழ்ந்தெடுக்கப்படும் பண்பாட்டுப் பொருள்கள் மற்றும் மரபியல் சார்ந்த தொன்மையான பொருள்களைப் பற்றிய ஆய்வு வேண்டப்படுவதாகும். இவற்றின் மூலமாக அறியப்படும் வரலாறு, பொருளியல், கலை நுணுக்கம், தொழில் நுணுக்கங்கள் ஆகிய பண்பாட்டுக் கூறுகள் சிறப்பானவை. இப்பொருட்களைச் சீரமைத்தல், பாதுகாத்தல் மற்றும் அவற்றை முறையாகக் காட்சியில் அமைத்து காப்பு செய்தல் பண்பாட்டு ஆய்வாளர்கள் இடையேயும், அறிவியல் அறிஞர்களிடையேயும் முக்கியம் வாய்ந்த பயனீட்டுக் கல்வியாக மலர்ந்துள்ளது. இவ்வகையில், என்.ஹரிநாராயணா அவர்களின் இந்நூல் மிக முக்கியத்துவம் பெற்றுள்ளது கண்கூடு. இந்நூலை ஆக்கித் தந்தமைக்கு அவரையும், வெளியீட்டாளரையும் நாம் பாராட்டாமல் இருக்க முடியாது.மூன்று பகுதிகளாக பகுக்கப்பட்ட இந்நூலில், 46 ஆய்வுக் கட்டுரைகள் சுவையான ஆங்கிலத்தில் உள்ளன. அருங்காட்சியியல் பற்றிய அனைத்துச் செய்திகளும் முறையாகத் தரப்பட்டுள்ளன. அருங்காட்சியகங்களை அமைக்கும் முறைகள், அமைக்கும் போது ஏற்படும் சிக்கல்கள் மற்றும் பன்னாடுகளில் அருங்காட்சியியலில் ஏற்பட்ட வளர்ச்சி ஆகிய பல பொருள்கள் பற்றிய முக்கிய செய்திகள் நிறைவாகத் தரப்பட்டுள்ளன.பண்பாட்டுப் பொருள்களைச் சீரமைத்தலில் பல வகைகள் உள்ளன. அவற்றுள் வேதியியல் முறையில் சீரமைத்தல் தனிப் பிரிவாகும். வேதியியல் மேலறிவும், ஆர்வமும், பழம் பொருள் களின் தன்மை சிதைபடா வண்ணம் பாதுகாக்கும் எண்ணமும் முக்கியத் தேவைகள். சீரமைத்தலின் நுணுக்கங்கள் பற்றி விளக்கமாகவும், தெளிவாகவும் குறிப்புகள் உள்ளன. பண்பாட்டுப் பொருள்கள் சீரமைத்தலின் வரலாற்று ஆய்வும் இந்நூலில் உண்டு. சீரமைத்தலின் நோக்கங்கள், தேவைகள், சீரமைப்பு முறைகளில் ஏற்பட்டுள்ள அதீத வளர்ச்சி பற்றியும் இந்நூல் விளக்குகிறது. அருங்காட்சியக வேதியியல் அலுவலர்களின் தகுதிகள், முக்கிய பண்புகள், கடமைகள் ஆகிய விவரங்கள் மிகச் சிறந்த பயனளிக்கும். தொல்லியல் மற்றும் வரலாறு ஆகிய துறை ஆய்வாளர் களுக்கும் வேதி யியல் சீரமைப்பு முறைகள் நன்கு தெரிய வேண்டும் என்று அறிவுறுத்துவது பாராட்டத் தக்கது.தானே முன்னின்று சீரமைத்த பணிகள் பலவற்றை விளக்கி யுள்ளது இந்நூலின் மற்றுமொரு முக்கிய சிறப்பாகும். தஞ்சாவூர் கோவில் பண்டைய ஓவியங் கள், மரச் சிற்பங்கள், பனை ஓலைச் சுவடிகள், செப்புப் படிமங்கள், காகிதப் பொருள்கள் மற்றும் ஓவியங்கள் ஆகிய தொன்மைப் பொருள்களைச் சீரமைத்த முறைகளை விளக்கியுள்ளது மிக்க பயனுள்ளதாகும். இத்துறையைச் சார்ந்த பலருக்கும் இம்முறைகள் பற்றிய தெளிவான அணுகுமுறைகளை இந்நூல் தந்துள்ளது. பழங்காலக் கோவில்கள், கட்டடங்கள் ஆகியவற்றை வேதியியல் முறைப்படி சீரமைத்தலும் பாதுகாத்தலும் நிரல்பட இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன. ஆண்டிப்பட்டியில் கிடைத்த ஈயக்காசு களைச் சீரமைத்து காப்பு செய்யப்பட்ட முறையும் சொல்லப்பட்டுள்ளது. சீரமைப்புக்கு தேவையான முக்கிய வேதியியல் பொருள்களின் பட்டியல், அளவுகள் ஆகியன தந்துள்ளமை, இப்பணிகளை மேற்கொள்ளும் பணியாளர்களுக் கும் ஏனைய பொது மக்களுக்கும் மிகத் துணை புரியும்.அருங்காட்சியியல் மற்றும் வேதியியல் சீரமைப்பு, காப்பியல் ஆகிய துறைகளில் பணியாற்றுவோரிடையே மிகவும் நன்கு அறிமுகமானவர் ஹரிநாராயணா. சிறந்த பயிற்சிகளைப் பெற்று, இந்தியாவிலேயே மிகச் சிறந்ததும், தொன்மையானதுமான சென்னை அருங்காட்சியகத்தில் 30 ஆண்டுகளுக்கு