ஆன்மிகம், இலக்கியம், ஓவியம், தொல்லியல், அறிவியல் சார்ந்த செய்திகளுடன் மலர்ந்துள்ளது, கலைமகள் தீபாவளி மலர். நர்மதா நதிக்கரையில் ஆதிசங்கரருக்கு அமைக்கப்பட்டுள்ள வெண்கலச் சிலை வண்ணப்படங்களுடன் உள்ள கட்டுரை ஆன்மிக ஊற்றாக பெருக்கெடுக்கிறது.பிரபல எழுத்தாளர்களின் சிறுகதைகள், கவிதைகள் அணி சேர்க்கின்றன. பிரபல ஓவியர் ஷியாமுடன் இனிய மாலைப்பொழுது கருத்து செறிவு மிக்கதாக அமைந்து உள்ளது. தஞ்சை சரஸ்வதி மஹால் நுாலகம் குறித்த கட்டுரை அறிவுப் பெட்டகம். பிரபலமாகிவரும் அறிவியல் தொழில் நுட்பமான செயற்கை நுண்ணறிவு பற்றியும் விரிவாக ஒரு கட்டுரை சுவை சேர்க்கிறது.பண்டிகையை இனிமையாக கொண்டாட உதவும் வகையில் மணம் பரப்புகிறது கலைமகள் தீபாவளி மலர்.– ராம்
- தீபாவளி மலர்
- கலைமகள்
கலைமகள்
Advertisement
Advertisement
புதிய வெளியீடுகள்
இதையும் பாருங்கள்!
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.






உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
மேலும் தீபாவளி மலர்
கலைமகள் தீபாவளி மலர் 2015
கலைமகள்
தீபாவளி மலர்
வழக்கம் போலவே இந்தாண்டும், கலை, இலக்கிய ஆர்வலர்களுக்கு தீனி போட்டுள்ளது, ‘கலைமகள்’ தீபாவளி மலர். குழந்தைகளுக்காக, அழ.வள்ளியப்பா, கொத்தமங்கலம் சுப்புவின் பாடல்களும், மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், ஜெயகாந்தன், சுஜாதா, பாலகுமாரன், மாயாவி உள்ளிட்டோரின் மயக்கும் சிறுகதைகளும் இடம் பெற்றுள்ளன. முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி துவங்கி, மு.வ., ம.பொ.சி., சா.கந்தசாமி, ஏ.என்.சிவராமன், நீதிபதி மு.மு.இஸ்மாயில், நல்லி குப்புசாமி உள்ளிட்ட பல்வேறு துறை வல்லுனர்களின் கட்டுரைகள் வாசகர்களின் கவனத்தை கவர்கின்றன. சுப்புடு, எஸ்.பாலசந்தர் உள்ளிட்டோரின் கலை விமர்சன, கலை ரசனை மிக்க கட்டுரைகள் பாரம்பரிய கலைகளுக்கு வண்ணம் தீட்டுகின்றன.ஜாஷா
கோபுர தரிசனம் தீபாவளி மலர் 2015
கோபுர தரிசனம்
தீபாவளி மலர்
வேதா, பத்மவாசனின் கோட்டோவியங்களின் அலங்காரத்துடன், அழகிய கோபுர தரிசனம், கண்ணதாசன், வாலி, பா.விஜய் உள்ளிட்ட கவிஞர் கூட்டத்தின் கவிதைகள், கல்கி, சுதா சேஷையன், சுகி.சிவம், திருப்பூர் கிருஷ்ணன் உள்ளிட்ட நட்சத்திர எழுத்தாளர்களின் கட்டுரைகள், கவுதம நீலாம்பரன் உள்ளிட்டோரின் சிறுகதைகளுடன், பலரின் துணுக்குகளை கொண்டு, தீபாவளி மலர் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.பார்த்திபன்
தினமலர் தீபாவளி மலர் 2015
தினமலர்
தீபாவளி மலர்
மனத்தூய்மைக்கு, மகா பெரியவர் தரும் ஆலோசனையுடன் துவங்குகிறது, ‘தினமலர்’ தீபாவளி மலர். அஞ்ஞான இருளை அகற்றுவதே தீபாவளி என, ஜீயர் சுவாமிகள் சொன்னது, காசி, கங்கா ஸ்நானத்தின் சிறப்புகள் என, ஒவ்வொரு பக்கத்திலும், தீபாவளியும் ஆன்மிகமும் இழையோடும் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. வாக்கு வன்மையில் மிளிர்ந்த வாரியார், புலவர்களுக்காக பாடிய அவ்வையார் என, சொல்வன்மையை போற்றும் கட்டுரைகளை தொடர்ந்து, கண்ணதாசனின், அர்த்தமுள்ள இந்து மதம் இடம்பெற்றுள்ளது பொருத்தம். எம்.ஜி.ஆர் நினைவலைகள், மனோரமா ஆல்பம், இவங்க தீபாவளி, இளவரசு 100 ஆகிய பக்கங்கள், திரை ரசிகர்களுக்கான சிறப்பு பகுதிகளாக உள்ளன. வண்ணப்படங்களுடன் இடம் பெற்று இருக்கும், ‘தீபாவளி – தோன்றிய வரலாறு’ உள்ளிட்ட சில கட்டுரைகள், தினமலர் வாசகர்களின் ஆன்மிக தேடலுக்கு விலையளிப்பவை.நடுவூர் சிவா
ஓம் சக்தி தீபாவளி மலர் 2015
ஒம் சக்தி
தீபாவளி மலர்
பெட்ரோலுக்கான மாற்று எரிபொருள் பற்றி, எட்டு ஆண்டுகளுக்கு முன், அருட்செல்வர் நா.மகாலிங்கம் எழுதிய, ‘எத்தனால் எரிசக்தி’ கட்டுரை ஆச்சரியம் அளிக்கிறது. மாற்று எரிபொருள் குறித்த அவரின் தெளிவான பாதையை, அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து, பின்பற்றி இருக்க வேண்டும்.சிற்பி, அப்துல் ரகுமான், காசி ஆனந்தன், புவியரசு, இன்குலாப் உள்ளிட்ட தமிழ் கவிதை எழுத்துலகில் பிரகாசிக்கும் கவிஞர்களின், 25 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. அதேபோல, பொன்னீலன், மேலாண்மை பொன்னுச்சாமி, ராஜேஷ்குமார், கி.ரா., உள்ளிட்டோரின், ஒன்பது சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன.‘ஒருவராக இல்லாத கடவுள்’ என்ற கட்டுரை, வாசகரை சிந்திக்கத் தூண்டும். அதில், ‘கடவுள் ஒருவராக இருந்தபோதும், மனிதர்களும், மதங்களும், நேர்கோட்டில் நில்லாமல், தனித்தனியே நிற்பதால் மனிதர்கள் வாழும் உலகில், கடவுள் மட்டும் ஒருவராக இல்லை’ என, முத்தாய்ப்பாக முடித்துள்ளார் கட்டுரையாளர்.‘டொர்னடோ எனும் அரக்கன்’ என்ற கட்டுரையில், டொர்னடோக்கள் பற்றிய விளக்கமும், அது விளைவிக்கும் சேதமும், நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றன. கதை, கவிதை, ஆன்மிகம், அறிவியல் என, அறிவு சார்ந்து, தரமாக வெளிவந்திருக்கிறது ஓம்சக்தி தீபாவளி மலர்.சு.சரண்யா
கல்கி தீபாவளி மலர் 2015
கல்கி பதிப்பகம்
தீபாவளி மலர்
காஞ்சிப் பெரியவர் ஆசியுரை, முருகன் பற்றிய கட்டுரையுடன், மலர் துவங்குகிறது. கர்நாடக இசை தொடர்பான டேப்புகள், ஆடியோக்களை சேகரிக்கும் கலை ஆர்வலர்கள் பற்றிய கட்டுரை நல்ல தொகுப்பு.காளிதாசனின் மேக சந்தேசம், தமிழ் விடு தூது, பலபட்டடை சொக்கநாதப் பிள்ளை இயற்றிய கிள்ளை விடு தூது, கச்சியப்ப முனிவர் இயற்றிய கச்சி ஆனந்த ருத்திரேசர் வண்டு விடு தூது ஆகிய நான்கு தூது இலக்கியங்கள் பற்றிய ஆய்வு கட்டுரைகள் அருமை.ரோமப் பேரரசன் மார்க்கஸ் அரேலியசின், ‘ஆத்ம சிந்தனை’ என்ற கட்டுரை, ராஜாஜி மொழிபெயர்ப்பில் வந்துள்ளது. எம்.எஸ்.சுப்புலட்சுமியின் நூற்றாண்டு கொண்டாடப்படும் வேளையில், அவரை நினைவு கூரும் விதத்தில், சென்னை சங்கீத வித்வத் சபையின், 42வது மாநாட்டில், அவர் நிகழ்த்திய தலைமை உரை, முழுமையாக கொடுக்கப்பட்டு உள்ளது. அச்சு பதிப்புலகத்திற்கு இணையாக வளர்ந்து வரும், மின்நூல்கள் பற்றிய கட்டுரை, காலத்தின் தேவையை காட்டுகிறது. சேலம் மாவட்டம், தம்மம்பட்டியில் தயாராகும் மரச்சிற்பங்கள் பற்றிய கட்டுரையும், படங்களும் ரசனையை கூட்டுகின்றன. அசோகமித்திரன், விமலாதித்த மாமல்லன், ராஜேஷ்குமார் உள்ளிட்டோரின் சிறுகதைகள், இந்திரா பார்த்தசாரதி, பூபாலன் ஆகியோரின் நாடகம், நாடக விமர்சனம் ஆகியவையும் இடம் பெற்றுள்ளன.விகிர்தன்
விஜயபாரதம் தீபாவளி மலர் 2015
விஜயபாரதம் பதிப்பகம்
தீபாவளி மலர்
மொத்தம், 38 கட்டுரைகள், 22 சிறுகதைகள் உள்ளடக்கி, பெரிதாய் வெளிவந்திருக்கிறது இந்த மலர்.சுவாமி விமூர்த்தானந்தாவுடனான, இளைய சமுதாயத்தினரின் சந்திப்போட, மலர் துவங்குகிறது; இளைஞர்களின் கேள்விகளுக்கு, அவர் பதில் அளித்துள்ள விதம் அருமை!‘எழில், இன்பம், இறை’ மற்றும், ‘கதை சொல்லும் கலை நகரம்’ ஆகிய பயணக்கட்டுரைகள், நம்மை வசீகரிக்கின்றன; நகரத்தார் பற்றிய பாராம்பரிய கட்டுரை, ரசிக்க வைத்துள்ளது. தேசிக விநாயகம் பிள்ளை, பாரதி, பாரதிதாசன் ஆகியோரில் யார், தமிழகத்தின் முதல் தேசிய கவி என்ற ஆய்வுக் கட்டுரை, விவாதம் செய்ய தூண்டும்.கோவில் திருப்பணிகளில் ஈடுபாடு காட்டிய, அம்மணி அம்மாள், பத்ராசலம் தம்மக்கா, ராணி ராசமணி அம்மையார், சிவபிருந்தா தேவி உள்ளிட்ட பெண்கள் பற்றிய தொகுப்பை, பூச்செண்டு கொடுத்து வரவேற்கலாம். முழுமையான ஆன்மிக மலராக வெளிவந்துள்ளது, விஜயபாரதம்.சரஸ்வதி சின்னத்துரை
அமுதசுரபி தீபாவளி மலர் 2015
அமுதசுரபி
தீபாவளி மலர்
முத்தமிழை முன்னிருத்தி, அமுதசுரபி தீபாவளி மலர் வெளிவந்துள்ளது.‘கம்பன் காட்டும் சிறுதொழில்கள்’ என்ற ஆய்வு, ‘முகநூலில் முகம் பார்க்கலாம்’ என்ற அறிவியல், ‘என் மனைவி, வீட்டில் தான் சும்மா இருக்கா’ என்ற வாழ்வியல், ‘இயற்கை விவசாயமே இந்தியாவின் எதிர்காலம்’ என்ற வேளாண்மை என, பல்துறைகளில் இருந்த கட்டுரைகள் தேர்ந்தெடுத்து தொகுக்கப்பட்டுள்ளன; அவை, ரசனையோடு சிந்திக்க வைக்கின்றன!இல.கணேசனின், இலக்கிய கூட்டங்கள் பற்றி விமர்சனம் சிரிப்பு வெடி! சிவனுக்கு அரைக் கண் தான் என்ற, துணுக்கு அருமை. தமிழ்கூறும் நல்லுலகிற்கு, தங்களின் படைப்புகளை கொடுத்த தமிழறிஞர்களைப் பற்றி, தற்போதைய பிரபலங்கள் கூறும், ‘முன்னோடிகள்’ கட்டுரைகள் அருமையாக தொகுக்கப்பட்டுள்ளன. கார்டூனிஸ்ட் கேசவின் ஓவியங்கள், முதல் ராஜராஜனின் நினைவாலயம், திரைத்துறை சார்ந்த நாகேஷ் மற்றும் மனோரமா பற்றிய கட்டுரைகளும் பாராட்டத்தக்கவை. வளவள கட்டுரைகள் இல்லாதது, இந்த இதழின் சிறப்பு! கவிதை, சிறுகதை, நாடகம், ஆன்மிகம் என, முழுமையான மலராக வெளிவந்துள்ளது.சி.கலாதம்பி
விகடன் தீபாவளி மலர் 2015
விகடன் பிரசுரம்
தீபாவளி மலர்
விகடன் தீபாவளி மலரில் இடம்பெற்றுள்ள, இறையருள் ஓவியர் சில்பியின் கடவுள் ஓவியங்கள், வாசகர்களை வணங்க வைக்கும். மகாராஜாக்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பது பற்றிய, ‘இது தான் ராஜ வாழ்க்கை’ என்ற வரலாற்று கட்டுரை, ரசிக்க வைக்கிறது.‘எதிரி எம்.பி.,க்களை சந்திக்கும் போது’ என்ற அரசியல் பேட்டி அருமை. நாதஸ்வரம், தவில் உருவாகும் விதம், விண்வெளி வீரர் ராகேஷ் சர்மாவின் பேட்டி, தைவான் நாட்டில் உள்ள வானவில் கிராமம், ஈழம் இன்றைய நிலை, ஊட்டி பிறந்த கதை, கதவு ஓவியம், வில்லும் வேலவனும் உள்ளிட்ட கட்டுரைகள், சிறப்பாக அமைந்துள்ளன.சிறுகதைகள், கவிதைகள், ஜோக்ஸ், கார்டூன் என, விகடனின் வழக்கமான முத்திரைகளும், இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.அஜித் நடித்த படங்கள் பற்றி, 18 பக்கங்கள்; நடிகர் சிவகுமார் பற்றி, 12 பக்கங்கள்; நடிகர், நடிகையர் போட்டோசூட் பற்றி, 16 பக்கங்கள்; நடிகையர் பற்றி, 12 பக்கங்கள்; கவிஞர் விக்ரமாதித்தன், சினிமாவில் நடிப்பது பற்றிய பேட்டி என, அசத்தலான மலராக வெளிவந்திருக்கிறது.சுரேஷ்
தினகரன் தீபாவளி மலர் 2015
தினகரன்
தீபாவளி மலர்
வழக்கமாக பெரும்பாலான தீபாவளி மலர்கள், சான்றோர், துறவிகளின் ஆசியுடன் துவங்கும். தினகரன் தீபாவளி மலர், டெக்னாலஜி அப்டேட்டுடன் துவங்குகிறது. ரிச்சி தெருவில் கிடைக்கும், அதிநவீன எலக்ட்ரானிக் பொருட்கள் பற்றிய தொகுப்பு.அதையடுத்து, சிவகாசி ஸ்ரீனிவாஸ் பைன் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் கலை நயமிக்கம், ௪௦ ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பகவத் கீதை புத்தகம் பற்றிய அறிமுகக் கட்டுரை. வீயெஸ்வியின் எழுத்துக்களில், எம்.எஸ்., பற்றி சில துளிகள், பல்வேறு நாடுகளின் உணவு வகைகள் தயாரிப்பு பற்றிய கட்டுரை, திரைத்துறையில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றங்கள் குறித்து இளைய இயக்குனர்களின் பேட்டி, ரயில்வே குறித்த பெரும்பாலான செய்திகளை தொகுத்த, ௯௨ வயது வெங்கட்ராமனின் அனுபவம், பொதிகை மலையில் உள்ள பாண்டியன் கோட்டை பற்றிய ஆய்வு கட்டுரை போன்றவை சுவாரசியமானவை.மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் கிடைக்கும் வகை வகையான தோசைகள், சென்னை பிராட்வேயில், பிரிட்டிஷ் காலத்தில் துவங்கி தற்போது வரை நடக்கும் புறா சந்தை, கொள்ளிடம் ஆற்றின் மேலணை, கீழணை கட்டிய சர் ஆர்தர் காட்டன் பற்றிய கட்டுரை, இலங்கையில் உள்ள தியேட்டர்கள் பற்றிய கட்டுரை ஆகியவை நம்மை ஈர்க்கின்றன. வான்வெளியில் இருந்து உலகை படமெடுப்பதில் ஆர்வம் கொண்ட அமெரிக்கர் ராபர்ட் டி ஸ்டீபன்ஸ் எடுத்த, கழுகுப் பார்வையில் சென்னை புகைப்படத் தொகுப்பு கண்களுக்கு விருந்து. இவை தவிர, ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், பட்டுக்கோட்டை பிரபாகர், பாவண்ணன், கே.என்.சிவராமன் உள்ளிட்டோரின் சிறுகதைகள் என, பல்சுவை மலராய் மலர்ந்திருக்கிறது, தினகரன் தீபாவளி மலர்.கிருஷ்ணபாலா
தி இந்து தீபாவளி மலர் 2015
தி இந்து
தீபாவளி மலர்
வழுவழு தாட்களும், வண்ண வண்ண படங்களும், எண்ணங்களை கவரும் வடிவமைப்பும் தான், ‘தி இந்து’ தீபாவளி மலரின் முதுகெலும்பு. ஊர் மனம், ஆன்மிகம், பெண் இன்று, திரை விலாசம், இலக்கியம், வாழ்வு இனிது என, ஐந்து பாகங்களை கொண்டுள்ளது, இம்மலர். கர்னாடக இசைப்பாடகர் சஞ்சய் சுப்பிரமணியன், மருத்துவர் கு.சிவராமன், பறவையியலாளர் ப.ஜெகநாதன் ஆகியோரின் நேர்காணல்களை விரிவாக பதிவு செய்துள்ளது. கடந்த 1970கள், தமிழ் திரை உலகில் கதா நாயகர்களின் நிறம் துவங்கி, அனைத்திலும் மாற்றங்கள் பூக்கத் துவங்கிய காலகட்டம். அப்பத்தாண்டுகளின் குறுக்கு வெட்டு தோற்றம், திரை ரசிகர்களுக்கு பல தெளிவுகளை ஏற்படுத்தும். செல்வா
லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர் 2015
லேடீஸ் ஸ்பெஷல்
தீபாவளி மலர்
காஞ்சி பெரியவரின் உபதேசத்தோடு, மலர் துவங்குகிறது. வடமொழியில் உள்ள ஹிதோபதேசம் என்ற நூலில் உள்ள நல்லுரைகள், அவற்றோடு ஒப்பிடத் தக்க தமிழ் இலக்கியங்கள், வி.என்.ஜானகி பற்றிய கட்டுரை, வேத அங்கங்கள் பற்றிய ஆர்.பி.வி.எஸ்.மணியன் எழுதிய கட்டுரை, சாருகேசியின், ‘வாரத்துக்கு ஒரு புத்தகம் படிக்கும் பில்கேட்ஸ்’ கட்டுரை, அயோத்தி, மதுரா தலயாத்திரை, ஜோத்பூர் சுற்றுலா என, பல சுவாரசியமான செய்திகளையும், தகவல்களையும் உள்ளடக்கி இருக்கிறது. பாஞ்சாலி சபதத்தில், தருமனை பாரதி எப்படி செதுக்கி உள்ளார் என்பதை பற்றிய கட்டுரை, முன்னாள் முதல்வர் பக்தவத்சலம் பற்றிய நினைவு கட்டுரை, இவை தவிர பல சிறுகதைகள் என, பல்சுவை இதழாக மலர்ந்துள்ளது, லேடீஸ் ஸ்பெஷல், தீபாவளி மலர்.மைதிலி
அம்மன் தரிசனம் தீபாவளி மலர் 2015
அம்மன் தரிசனம்
தீபாவளி மலர்
56 ஆன்மிக கட்டுரைகள் இடம் பெற்றுள்ள, அம்மன் தரிசனம் தீபாவளி மலர், வெள்ளி விழா மலராகவும் வெளிவந்துள்ளது. ஆன்மிகம் உணர்த்தும் அற்புத கருத்துக்கள், அனுபவங்களாக, பக்கத்திற்கு பக்கம், ஆன்மிக பெரியோர்களால் விளக்கப்பட்டுஇருக்கின்றன.கார்த்தி
தினமணி தீபாவளி மலர் 2015
தினமணி
தீபாவளி மலர்
பல்சுவை, ஆன்மிகம், கட்டுரைகள், சிறுகதைகள், விந்தன் நூற்றாண்டு குட்டிக்கதைகள், சொல்லோவியம், சினிமா எனும் ஏழு பெருந்தலைப்புகளுக்குள், அடைக்கப்பட்ட படைப்புகளே தினமணியின் தீபாவளி மலர். எம்.எஸ்.சுப்புலட்சுமி, அருவிகள், மலைகள் உள்ளிட்ட தலைப்புகளில் உள்ள படைப்புகள், பல்சுவை. தனக்கு மட்டுமின்றி, அனைவருக்கும் வளம் சேர்க்கும், நட்சத்திர மரங்கள், ஆலய தரிசனம் போன்ற கட்டுரைகள், ஆன்மிக அன்பர்களுக்கு வெளிச்சம். நாஞ்சில் நாடனின் நீண்ட கட்டுரையை போலவே, பாரதி பாஸ்கர், க.வேணுகோபாலின் கட்டுரைகளும் தரம். சா.கந்தசாமி, எஸ்.ராமகிருஷ்ணன், இமையம் உள்ளிட்ட பிரபலங்களின் சிறுகதைகள் வாசகர்களுக்கு விருந்து.சிவா
அம்மன் தரிசனம் தீபாவளி மலர் – 2016
அம்மன் தரிசனம்
தீபாவளி மலர்
‘தன்னுடைய நன்மைக்காக பிறருக்கு தீமை செய்யும் மனிதர்களை மனுஷ்ய ராட்ஷசர்கள்’ என, சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ பாரதி தீர்த்த மகா சுவாமிகள் கூறும் அருளாசியுடன் தொடங்கும் மலர் ஆன்மிக மலராகும்.ஆதிசங்கரர் தொடங்கிய நான்கு மடங்களில் தலையாயதான சிருங்கேரி மடத்தின் தர்ம நெறிகளை தாங்கி வரும், ‘அம்மன் தரிசனம்’ மாத இதழ் தீபாவளி மலர், பல்வேறு கருத்துக்களை கொண்டிருக்கிறது.பொருளீட்டுவதும், இன்பம் துய்ப்பதும் அறவழியில் அமைய வேண்டும் என்ற சுவாமி ஓங்காரநந்தர் கருத்து, யாருக்கு ரகசியங்களை கூறக்கூடாது என்ற விதுர நீதிக் கருத்து, உலகனைத்தும் ஒன்றாக காணும் வழியே தேவை என்னும் கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் கட்டுரை எனப் பல்வேறு சிறப்புகளை இம்மலர் கொண்டிருக்கிறது.கம்போடிய நாட்டில் ஆயிரம் லிங்க வழிபாடு, இந்திரா சவுந்தரராஜனின் கம்பனின் அரங்கேற்றம், உட்பட பல கருத்துக்கள் தெளிவான ஆன்மிக அறிவை விரும்பும் பலருக்கு நல்விருந்தாகும். அட்டைப் படத்தில் ஸ்ரீராஜகோபால சுவாமியின் அழகும், அதை அடுத்து, சகல செல்வங்களையும் தரும் பிள்ளையார் பட்டி கற்பக விநாயகர், ஆதிசங்கரர், குரு பரம்பரை ஆராதிக்கும் அன்னை சிருங்கேரி சாரதை, நாடு முழுவதும் பயணித்து, தர்மநெறியைப் பரப்பிய ஸ்ரீஅபிநவ வித்யா தீர்த்த மகா சுவாமிகள் வண்ணப்படம் ஆகியவை இந்த மலரில் ஆன்மிக நேர்த்திக்கு அடையாளமாக உள்ளது.
தினமணி தீபாவளி மலர் – 2016
தினமணி
தீபாவளி மலர்
ராமானுஜர் அவதரித்து ஆயிரமாவது ஆண்டையொட்டி, தினமணியின் தீபாவளி மலர், அவரது முகப்பு வண்ணப்படத்துடன் வெளி வந்துள்ளது. ராமானுஜர் குறித்த, ‘தானுகந்த திருமேனி, தமர் உகந்த திருமேனி, தானாகிய திருமேனி’ பற்றிய கட்டுரைகள், படங்கள் சிறப்பாக அமைந்து உள்ளன. கவிக்கோ ஞானச்செல்வன் முனைவர் அரங்க.பாரி, உள்ளிட்டோர் எழுதியுள்ள இலக்கிய பக்கங்களும், அசோக மித்ரனின், ஆட்டுக்குவால், சா.கந்தசாமியின், நினைவிற்கு வந்தவன் உள்ளிட்ட, சிறுகதைகளும், தகழி சிவசங்கரன் பிள்ளை உள்ளிட்டோரின், பிறமொழி கதைகளும், தீபாவளி மலருக்கு அழகு சேர்க்கின்றன. நகைச்சுவை நடிகர்கள் வழங்கும் ஆளுக்கொரு சிரிப்பு, தமிழகத்தில் அமைந்துள்ள கோட்டைகள் ஆகியவை சிறப்பான தொகுப்பாக்க அணி சேர்த்துள்ளன.
சண்முக கவசம் தீபாவளி மலர் – 2016
சண்முக கவசம்
தீபாவளி மலர்
ஆன்மிக பல்சுவை மாத இதழ் வெளியீடான இந்த மலர், முருகப்பெருமான் திருவுரு தாங்கிய முகப்பைக் கொண்டது. இயற்கை உருவாகக் கொண்டவன் முருகன் என்னும் தமிழ்த் தென்றல் திரு.வி.க., கட்டுரை, தாயைக் கடவுளாக வணங்குவது சிறந்த நெறி என்ற வாரியார் சுவாமிகள் விளக்கம், தென்காசித் திருத்தலம் உட்பட பல்வேறு திருத்தலப் பெருமை என்று பக்தி சம்பந்தமான விஷயங்கள், அதைப்போற்றும் பல பெரியோர்கள் பற்றிய தகவல்கள் இதில் சிறப்பாக உள்ளன.
தினகரன் தீபாவளி மலர் – 2016
தினகரன்
தீபாவளி மலர்
திருவண்ணாமலை கிரிவலத்தில் ஆர்வம் கொண்ட நடிகர் அஜீத், இப்போது ஏன் அதை கைவிட்டார் என்ற விடையை தெரிவிக்கும் முதல் கட்டுரை மட்டும் அல்ல; அட்டையில் அவரது வண்ணப்படமும் மலரை அலங்கரிக்கிறது. பிரமிக்க வைக்கும் தஞ்சை பெரிய கோவில் குறித்து ஒளிப்பதிவாளர் ஸ்ரீராம் சந்தோஷ் காட்டிய வண்ணப்படங்கள், நேர்த்தி மிக்கவை. அதே போல சிப்பிக்குள் சுண்ணாம்பு மற்றும் பல்வேறு தகவல்கள் சிறப்பாக உள்ளன.பாலகுமாரன், மனோஜ் செந்தில் குமார் உட்பட பலரது சிறுகதைகள், யுகபாரதி, ஜெ., பிரான்சிஸ் கிருபா ஆகியோர் உட்பட பலருடைய கவிதைகள், சுற்றுலா, வரலாறு, ஆன்மிகம் என்று பல சிறப்புகளை இம்மலர் கொண்டிருக்கிறது.
கல்கி தீபாவளி மலர் 2017!
கல்கி பதிப்பகம்
தீபாவளி மலர்
வழக்கத்துக்கு மாறாக, புத்தக அளவும், பக்க எண்ணிக்கையும் குறைவாக இருந்தாலும், கையில் எடுக்கும்போது, கனமாக இருப்பதை உணர முடிந்தது; படைப்புகளின் தன்மை அத்தகையது.காஞ்சி பெரியவரின் அருளாசியுடன் துவங்குகிறது, மலரின் அத்தியாயங்கள். ஓவியர் பத்மவாசனின் கை வண்ணத்தில் ஒளிரும் அட்டைப்பட விளக்கம், உள்ளே, ‘ஒரு தேவதையின் மழைப்படம்’ என்ற கட்டுரையில் வெளிப்பட்டுள்ளது.வழுவழு தாளில், புத்தக வடிவமைப்பும் அசத்தல். அதற்கு பக்கபலமாக, கட்டுரை, கதை மற்றும் கவிதை என, ஒவ்வொரு பகுதியும் தேர்ந்தெடுத்த முத்து போல் பிரகாசிக்கிறது. முதல் பக்கத்தில், மலர் தயாரிப்பில் ஈடுபட்டவர்களுக்கு, தீபாவளி வாழ்த்து தெரிவித்ததிலிருந்து, கடைசி பக்கம் விளம்பரதாரர்களுக்கும், வினியோகஸ்தர்களுக்கும் நன்றி செலுத்துவது வரை, சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.ஒவ்வொரு படைப்பிலும், எழுத்திலும், ஓவியர் மற்றும் புகைப்படக்காரரின் புகைப்படங்களை வெளியிட்டு, அடையாளம் காட்டியிருப்பது சிறப்பு. தமிழின் பிரபல எழுத்தாளர்களின் பெரும்பாலோரின் படைப்புகள், இம்மலரில் இடம் பெற்றுள்ளன.கேரள படகு வீடு மற்றும் சீன பயணக் கட்டுரை படிக்க சுவாரசியமாக உள்ளன.ராஜாஜி எழுதிய, தமிழ் மறைகளின் பொருளை பற்றிய கட்டுரை, எளிய நடையில் அனைவருக்கும் புரியும் வகையில் தொகுக்கப்பட்டுள்ளது அருமை.இதழ் முழுக்க வண்ணத்தில் அழகிய படங்களும், படைப்புகளும் வெளியாகியிருப்பது, படிக்க படிக்க ஆர்வத்தை துாண்டுகிறது.
கலைமகள் தீபாவளி மலர்-2017!
கலைமகள்
தீபாவளி மலர்
பாரம்பரிய முறையில் தீபாவளி மலர் வெளியிடும் இதழ்களில், கலைமகள் இதழும் ஒன்று. அந்த வகையில், இந்த ஆண்டும் தீபாவளி மலரில் எந்தெந்த பகுதி எல்லாம் இடம் பெற வேண்டுமோ, அத்தனை பகுதிகளுமே உள்ளடக்கியுள்ளன.குபேரர், விநாயகர் துணையுடன், கஜலட்சுமியின், லஷ்மிகரமான அட்டைப்படம் கண்ணை விட்டு அகல மறுக்கிறது.ஓவியர் தமிழின் கைவண்ணத்தில், காஞ்சி மகானின் படமும், ‘பசு காத்தலே பாரினைக் காத்தல்’ என்ற தலைப்பில், காஞ்சி பெரியவரின் அருளாசியை படிக்கும்போதே மெய் சிலிர்க்கிறது.கி.வா.ஜகன்னாதனின், கொஞ்சும் தமிழில், முருகனை பற்றிய கட்டுரையை படிக்கும்போது, மனதுக்குள் ஒரு நெகிழ்ச்சி ஏற்படுகிறது.ஆன்மிக கட்டுரை மட்டுமல்லாமல், பொது கட்டுரைகள், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு, அவரது உதவியாளர், கே.பி.ராமகிருஷ்ணன் எழுதிய, எம்.ஜி.ஆர்., பற்றிய நினைவுகள், ராஜேஷ்குமார், தேவிபாலா உட்பட பல பிரபல எழுத்தாளர்களில் சிறப்பு சிறுகதைகள், கவிதைகள் மற்றும் சத்ரபதி சிவாஜியின் கட்டுரை, இளைய தலைமுறையினருக்கு உத்வேகத்தை தரும் வகையில் அமைந்துள்ளது.மொத்தத்தில், சகல விஷயங்களும் அடங்கிய களஞ்சியமாக திகழ்கிறது.ஒரு நாளில் படித்து விட முடியாது. சிறிது சிறிதாக படித்து, சுவைக்க வேண்டிய இலக்கிய பெட்டகம்.
கச்சிதமான மலர் தினமலர் – தீபாவளி மலர் 2017!
தினமலர்
தீபாவளி மலர்
பள்ளிக் கல்வித் துறையில் அலைபேசி, ‘செயலி’ மூலம் புரட்சி செய்துவரும் பைஜுஸ் நிறுவனத்தின் தலைவர் ரவீந்திரனின் பேட்டியோடு துவங்கும் மலர், முகுந்த் நாகராஜனின் மனம் நெகிழும் இளகிய கவிதையோடு நிறைவு பெறுகிறது.அதற்குள் எத்தனை எத்தனை வர்ணங்கள். கோவை டு லண்டன் சென்ற மூன்று பெண்களின் அசகாய பயணம் ஒரு பக்கம் என்றால், கூடலுார் மலையடிவாரத்தில் ஆதிகாலத்திலிருந்து பின்பற்றப்படும் விவசாய திருவிழாவை எடுத்துச் சொல்லும் அழகிய புகைப்படக் கட்டுரை மறுபக்கம்.இன்றைக்கு யூ – டியூப்பைக் கலக்கிக் கொண்டிருப்பவர்கள் இளைஞர்கள் தாம். அதுவும் கிண்டல், கேலி, சமையல், விமர்சனம் என்று ஒவ்வொரு துறையிலும் பிரபலமாக இருக்கும் பல்வேறு யூ – டியூப் சேனல்களை நடத்துவோரின் பேட்டிகள் அடங்கிய, ‘வாயால் வளர்ந்தோர்’ கட்டுரை, படிக்க படிக்க பிரமிப்பு.நம் நாட்டின் பல்வேறு அரசவைகளில், சமையலுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது என்பதை, ‘ராஜ விருந்து’ எடுத்துச் சொல்ல, பா.விஜய், தமிழ்மணவாளன் கவிதைகள், நவீன வாழ்வின், வேறு வேறு முகங்களை எடுத்துச் சொல்கின்றன.நர்சிம், அராத்து, ஞாநி ஆகியோரின் இளமை சொட்டும், கலகலப்பான சிறுகதைகளோடு, இம்மலரில் இரண்டு அம்சங்கள் நம் கவனத்தைக் கவருகின்றன.எழுத்தாளர் பிரபஞ்சனின் விரிவான பேட்டி முக்கியமானது. ‘சமூக ஊடகங்களில் விரைவில் எழுத வருவேன்...’ என்ற இவரது அறிவிப்பு வரவேற்கத்தக்கது என்றால், கூடவே, தமிழின் முக்கியமான நாவல்கள், சிறுகதைகள் மற்றும் சினிமாக்களை வரிசைப்படுத்தியுள்ளது கவனிக்கத்தக்கது.இன்னொரு அம்சம், குடந்தை சீத்தாராமனின் வந்தியத் தேவன் பற்றிய கண்டுபிடிப்பு. பொன்னியின் செல்வன் நாவலின் ஹீரோவான வந்தியத் தேவனது தோற்றத்தை, நாம் ஓவியர் மணியத்தின் ஓவியம் மூலமாகவே அறிந்திருப்போம்.ஆனால், அதற்கும் ஓர் ஆதாரம் இருப்பதை, சீத்தாராமன் புகைப்படத்தோடு உறுதிப்படுத்தியிருப்பது, வரலாற்று ஆய்வில் முக்கிய முன்னேற்றம்.அனைவரும் படிக்கும் வண்ணம் பெரிய எழுத்துரு, தீபாவளியின் மகிழ்ச்சியை எடுத்துச் சொல்லும் குதுாகல மேலட்டை என்று, ‘தினமலர் – தீபாவளி மலர்’ நுாறு பக்கங்களில் பட்டுக் கத்தரித்தது போல், கச்சிதமாக அமைந்துள்ளது.