/ கதைகள் / பொறுமையற்றவர்கள்

₹ 240

பலதார மண வழக்கத்தால் பெண்களுக்கு ஏற்படும் இன்னல், வலி, துன்பங்களை உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தும் நாவல். உண்மை நிகழ்வுகள் அடிப்படையில் புனையப்பட்டுள்ளது. பிரெஞ்சு மொழியில் இருந்து தமிழாக்கம் செய்யப்பட்டுள்ள இதன் கதைக்களம், மத்திய ஆப்ரிக்க நாடான கேமரூனை மையப்படுத்துகிறது. மரபு, பண்பாடு, கலாசாரம் என்ற பின்னணியில் பெண்கள் மீதான வன்முறையும், அதனால் ஏற்படும் மீள இயலாத துயரமும் காட்சிபூர்வமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. ரம்லா, ஹிந்துா, ஸபிரா என்ற பெண்களின் கதைகள் சுயசரிதை போல் விவரிக்கப்பட்டுள்ளன. மூன்றும் வலை பின்னலுக்குள் கோர்க்கப்பட்டு நாவலாக கச்சித வடிவம் பெற்றுள்ளது. பெண்களின் அச்சுறுத்தல் நிறைந்த வாழ்வு, துயர் நிறைந்த அனுபவமாக வெளிப்படுகிறது. லட்சிய நோக்கில் காதலித்தவனை மணக்க முடியாமல் சிதைகிறது ரம்லா வாழ்வு. கட்டாயத்தால் போதைக்கு அடிமையானவனை மணந்து வீணாகிறது ஹிந்துாவின் வாழ்க்கை. பலதார மணத்தில் சிக்கி விடுபட இயலாமல், வலியால் மற்ற பெண்களையும் இம்சிக்கிறது ஸபிராவின் கதை. மூவர் மீதும் குடும்ப கவுரவத்தை முன்னிறுத்தி வன்முறை கட்டவிழ்க்கப்படுகிறது. அது ஒற்றை புள்ளியில் தாண்டவமாடும் கோலத்தை சித்தரிக்கிறது. குடும்ப வன்முறையால் துயரம் பொங்கி வழிகிறது. பொறுமையை பெண்கள் மீது திணிப்பதும், அது நம்பிக்கையின்மை மற்றும் சிதைவாக வெளிப்படுவதையும் கோரமுகம் உடைய கதாபாத்திரங்கள் உணர்த்துகின்றன. மேன்மையான அன்பு, கனிவு, இரக்கம், மனசாட்சி ஆங்காங்கே பரிவாக வெளிப்பட்டாலும், பாரம்பரியம், மரபு வழிபட்ட நம்பிக்கை, குடும்ப கவுரவம் என்ற பதாகைகள் முன்நின்று வன்முறை உச்சக் கட்டத்துக்கு நகர்வதை காட்டுகிறது. தேர்ந்தெடுத்த சொற்களால் எளிய நடையில் நாவல் அமைந்துள்ளது. ஒவ்வொரு வாக்கியமும் வாசிப்புக்கு வளம் சேர்க்கின்றன. வன்முறை சூழலிலும் கவித்துவம் நிறைந்த விவரிப்புகள் நெகிழ்ச்சி தருகின்றன. எதற்கும் உதவாதவற்றை மரபு, கலாசாரம், பாரம்பரிய நம்பிக்கை என பண்பாடாக முன்னிறுத்தி, பெண்கள் மீது சமூகம் நிகழ்த்தும் வன்முறையை நுட்பமாக வெளிப்படுத்தும் நாவல். – அமுதன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை