/ கதைகள் / உறவுப் பாலம்

₹ 420

பலகாரத் தட்டுகள் தாமாக பறக்கின்றன. சுவரில் மாட்டப்பட்ட படம் தன்னிச்சையாக விழுகிறது. மீன் தொட்டி திடீரென்று விழுந்து மீன்கள் எல்லாம் துடிதுடித்து சாகின்றன. அத்தகைய சம்பவங்கள் திடுக்கிட வைக்கின்றன. உறவுப் பாலம் நாவல் இப்படித்தான் ஆரம்பிக்கிறது. ஒரு கார்ப்பரேட் அலுவலகத்தின் குளிரூட்டப்பட்ட அறையில் துவங்கும் கதை மெல்ல மெல்ல மர்மங்கள் நிறைந்த மாளிகைக்குள் நுழையும் போது, திகிலுாட்டும் திரைப்படத்தை பார்க்கும் உணர்வு ஏற்படுகிறது. வசதி படைத்த ராமலிங்கம் குடும்பத்தில் நிகழும் விசித்திர சம்பவங்கள், அழகும் அதிகாரமும் கொண்ட மூத்த மகள் சாரதா, துடிப்பான இளைய மகள் சந்தியா என நகர்கிறது. எழுத்தாளரான சேதுராமன் கதையில் நுழையும்போது சூடுபிடிக்கிறது. சந்தியாவை பெண் பார்க்க எழுத்தாளர் சென்றபோது, அந்த வீட்டில் நடக்கும் அமானுஷ்ய நிகழ்வுகள், இருக்கையின் நுனிக்கே கொண்டு வந்து விடுகின்றன. திகில் நிறைந்த பின்னணியில் சேதுவிற்கும், சாரதாவிற்கும் இடையே மலரும் மெல்லிய காதல் மனதை உருக்குகிறது. மர்மமான நிகழ்வுகளில் அச்சத்தையும், மர்மங்கள் விலகும்போது அறிவியலையும், மனங்கள் சேரும் போது மகத்தான காதலையும் மூலதனமாக வைத்திருக்கிறது. ஆன்மிகத்தின் உச்சத்தை தொட்டு முடிகிறது. மேலோட்டமாக பார்த்தால் ஆன்மிகத்தோடு வகைப்படுத்த முடியாது. அர்த்தமுள்ள மனித உறவுகளும், தன்னலம் பார்க்காத அன்பும், காதலும் தான் உண்மையான ஆன்மிகம் என்று நினைத்தால், இது ஆன்மிக புத்தகம் தான். அடுத்தடுத்த அசம்பாவிதங்களால் தாங்க முடியாத வேதனை அடையும் சாரதாவும், சந்தியாவும் அன்பால் மீண்டு வருவது தான் கதை சுருக்கம். அதை அமானுஷ்யம், காதல், திகில், மர்மம் போன்ற உணர்வுகளில் தோய்த்து, அன் பென்னும் அமுதத்தை ஊற்றி சத்துணவாக கொடுத்திருக்கிறார் நுாலாசிரியர். கதையில் பல நெருக்கமான காதல் காட்சிகள் வருகின்றன. உடல்கள் நெருங்கவில்லை; உள்ளங்கள் தான் நெருங்குகின்றன. செய்வினை, பில்லி, சூனியம், ஏவல், பேய், பிசாசு, ஆவி எல்லாம் உண்மையிலேயே இருக்கிறதா என்ற கேள்விக்கு, விஞ்ஞானியின் வார்த்தைகளில் நச்சென்று பதில் சொல்லப்பட்டு உள்ளது. செய்வினை, பில்லி, சூனியம், பேய், பிசாசு எல்லாமே மனித மனதில் இருக்கும் சக்தியின் பரிமாணங்கள் தான். உறவுப் பாலம் ஒரு மர்ம கதை. இதில், துாக்கத்தை கெடுக்கும் திகில் கொஞ்சம்கூட இல்லை. வாழ்வை கொடுக்கும் அன்பும் நம்பிக்கையும் நிறைய இருக்கிறது. – சுமித்ராதேவி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை